இலங்கை வடக்கு மாகாணத்தில் முழுஅடைப்பு போராட்டம்: அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு மாகாணத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அனுராதபுரம் சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், ராசதுரை திருவருள், மதியழகன், கணேசன் தர்ஷன் ஆகிய 3 பேர் மீதான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கு தற்போது சிங்கள பகுதியான அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலை யில் இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் பின்னணியில் இலங்கை சிறைகளில் உள்ள 132 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி வடக்கு மாகாணத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட 40 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இதன் காரணமாக யாழ்ப்பாணம், திருநெல்வேலி உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.