இலங்கை: மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்

இராஜதந்திர நகர்வாக மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் இவ்வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (25) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடந்தது.

இங்கு பேசிய அமைச்சர், ”ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த அரசாங்கம் பெற்றக் கடனை மீள செலுத்துவதில் சிரமம் இருக்கிறது. இந்தத் திட்டங்களினால் வருமானம் இல்லை. நட்டத்தை எதிர்கொள்வது பெரும் சிரமாக இருந்தது. இந்த நட்டத்தை எதிர்கொள்ள மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க நேரிடும். அதனை செய்யாது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கினோம். மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்தோம். இதன்மூலம் இராஜதந்திர ரீதியான சிக்கலும் தவிர்க்கப்பட்டுள்ளது.”

வடக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணியை சீனாவிற்கு வழங்குவதற்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த இதன்போது தெரிவித்தார்.

”ஏற்கனவே வடக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்தியாவின் வேலைத் திட்டத்தில் 40 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் தேவை இருக்கிறது. இதனை சீனாவிடம் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது. காரணம், இந்தியாவினால் கட்டப்படும் வீடொன்றுக்கு 2.2 மில்லியன் ரூபா (22 லட்ச இலங்கை ரூபா) செலவிடப்படுகிறது. ஆனால் 1.3 மில்லியன் ரூபா செலவில் வீட்டைக் கட்டித்தருவதாக சீனா கூறுகிறது. இருந்தாலும் இதனை சீனாவிற்கு வழங்குவது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அதனால், இந்த விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த வாரம், இரண்டு நாடுகளுடன் இராஜதந்திர பேச்சுக்களை நடத்தி, அடுத்தவாரம் அமைச்சரவையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார். அதன்பின்னர் முடிவெடுக்கவுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

“ஹம்பாந்தோட்டை துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது”
ஐக்கிய அரபு எமிரேட்: பைலட் இல்லாத விமான டேக்சி அறிமுகப்படுத்த திட்டம்
இதேவேளை, மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்குவது குறித்து 40 வருட கால ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இந்தியாவுடன் பேசி இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மத்தல விமான நிலையத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள நட்டத்தை சமாளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மத்தல விமான நிலையம் இலாபகரமாக இயங்கும்போது அதில் 30 சவீத லாபம் இலங்கைக்குக் கிடைக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.