இலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்

இலங்கை கொழும்பு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் பிரதீப்குமார் பண்டாரா, 31. போதைப் பொருட்கள் கடத்தலில் தொடர்பு இருந்ததால், இலங்கை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்த பிரதீப்குமார் பண்டாரா, கள்ளப்படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு கடந்த, 5 ம் தேதி வந்தார். அப்பகுதியில் இருந்தவர்களிடம் சிங்கள மொழியில் பேசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மண்டபம் போலீசார் அளித்த தகவலின்படி, கோவை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் பிரதீப்குமாரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரதீப்குமார் பண்டாரா, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக கோவை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜூ நியமிக்கப்பட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் பிரதீப்குமார் பண்டாராவிடம் விசாரணை நடத்த நான்கு நாட்கள் கஸ்டடி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.

கோவையில் வசித்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா உயிரிழப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் அம்மானி தான்ஜி, பெண் வக்கீல் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தாதா அங்கொட லொக்காவுக்கு விஷம் கொடுக்கப்படவில்லை. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என, உடல் உள்ளுருப்பு ஆய்வக பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.