இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறான விடயம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதம செய்தி ஆசிரியர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் “வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, இந்தியாவிடமே இருப்பதாக தமிழர்கள் நம்பி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை உள்நாட்டிலேயே வழங்க முடியும்,” என கூறினார்.

இலங்கை தமிழர்களுக்காக தீர்வுத்திட்டம், தம்மிடமிருந்தே கிடைக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தம்முடன் இணைந்து செயற்படும் பட்சத்தில், அதற்காக திட்டம் விரைவில் கிடைக்கும் என அவர் கூறினார்.

தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அரசாங்கம் தமிழ் மக்களுடன் என்றும் ஒன்றாகவே செயல்படும் என மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான திட்ட வரைவு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தையும் தாண்டிய (13 பிளஸ்) அதிகாரத்தை வழங்குவதாக கூறிய அவரது தற்போதைய நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

தான் அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.