இலங்கை தமிழர் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 14-ம் தேதி வந்திருந்த அவர், ஆழ்வார்குறிச்சி சிவசைலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்து, திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் வழியில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு நேற்று அவர் வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள அகத்திய முனிவர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கு இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்துள்ளது. இன்னும் கூடுதல் உதவிகள் செய்யும் வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்..

இலங்கை தமிழர்களை வைத்து இந்தியாவில் நடைபெறும் அரசியல் குறித்த கேள்விக்கு அவர், ‘இது பெரிய விஷயமல்ல’ என்று பதிலளித்தார்.

வருகைக்கான காரணம் என்ன?

இலங்கை வடக்கு மாகாண முதல்வரின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த பிப்ரவரியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பிரிவு சார்பில், முதலாவது சர்வதேச சித்த மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இக்ருத்தரங்கத்தில் பங்கேற்ற விக்னேஸ்வரன் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களை சந்தித்து பேசியிருந்தார்.

இக்கல்லூரியில், இலங்கையில் இருந்து ஆண்டுக்கு 6 மாணவர்கள் முதுகலை சித்த மருத்துவ பட்டப்படிப்பில் சேர்க்கப்படும் நிலையில் அவர்களது கல்வி மற்றும் நிலை குறித்தும் அப்போது கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி வந்திருந்த அவர், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு வந்து பார்வையிட்டுச் சென்றார் என்று கூறின.