இலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது – இரா.சம்பந்தன்

இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார் இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை.

தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அவர்களின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது. இதன் காரணமாக தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.

2015ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இம்முறை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று கோட்டாபய அரசு கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. அதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலேயே கோட்டாபய தலைமையிலான அரசு செயற்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்காத தமிழ் மக்களைப் பழிவாங்கும் வகையிலேயே அவர் செயற்படுகின்றார்.

இந்தக் காரணங்களால் சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்துள்ளோம் என்றார்.

இதே வேளை இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து தமிழர்கள் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பு நடைபெற்று வருகின்ற நிலையில், அந்த நாளை கரிநாளாக கடைப்பிடித்து வருகின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

சுதந்திர தினம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயத்தினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு கடந்த 72வருடங்களாக தமிழர்களை உயிருடன் அழித்தல் அல்லது தமிழ்த் தேசத்தின் தாங்கு தூண்களான மொழி, கலாசாரம், பொருளாதாரம், கல்வி, நில ஆதிக்கம் போன்றவற்றின் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டு வருகின்றது.

அக்கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அரங்கேற்றும் வகையிலேயே இலங்கை அரச கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மனநிலை கொண்ட சிங்கள பேரினாவாத அரசினால் கொண்டாடப்படும் தினமாகவே பிப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரதினம் அமைந்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களைப் பழிவாங்குகிறார் கோட்டாபய - இரா.சம்பந்தன்

தமிழினத்தை அழித்து, அடிமைப்படுத்தி, இலங்கையை தனி சிங்கள பௌத்த தேசமாகக் கருதி, சிங்கள பௌத்தம் கொண்டாடும் சுந்திரதிரநாளை அதற்கு எதிர்மாறாகவே பாதிக்கப்பட்ட தமிழத் தேசம் கடந்த 72 ஆண்டுகளாக கறுப்பு நாளாக கடைப்பிடித்து வருகின்றது என்று அந்த ஊடக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படவேண்டும் என்று தெரிவித்துள்ள அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இவ்விடயம் தொடர்பில் உத்தியோக பூர்வமாக அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டால்தான் தமிழ் மக்களையும் உள்வாங்கி எதிர்காலத்தில் செயற்பட முடியும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 4 வருட நல்லாட்சிக்காலத்தில் நடந்த சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்படுவதால் மாத்திரம் தமிழர்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் என்று நினைத்துவிடக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் சுதந்திர தினத்திற்கான தமது எதிர்ப்பினை தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதே வேளை சுந்திர தினத்தை எதிர்த்து உள்நாட்டு யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகணாங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராட்டங்களை நடத்தினர்.