இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி

சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரை 2-0 என்ற ரீதியில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே. ஆனால் இந்த வெற்றி, இலங்கை அணிக்கு புதிய பலத்தை தந்துள்ளதா/ புதிய வீரர்கள் சரியாக இடங்களை பிடித்துள்ளார்களா? இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்ததும் இலங்கை டெஸ்ட் அணி முழுமை பெறுமா? இப்படியான முக்கிய விடயங்களே இங்கே கவனிக்க வேண்டியவை.

இந்தத் தொடர் இலங்கை அணிக்கான இலகுவான தொடர் எனக் கூற முடியாது. வெற்றி பெற்றாலும் கூட போராடிப் பெற்ற வெற்றிகள் என்றே கூற வேண்டும். சிம்பாப்வே அணியும் முழுமையான அணி இல்லை. சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே அவர்களும் விளையாடியுள்ளனர். சிலர் இலங்கை அணிக்கு பெரும் தலையிடியாக இருந்துள்ளனர். இலங்கை அணி இலகுவாக வெற்றி பெறப்போகின்றது என்ற நேரத்தில் பெரிய தலையிடியினை வழங்கினர். முதற் போட்டியில் இலங்கை அணி மயிரிழையில் வெற்றி பெற்றது. சிம்பாப்வே அணியின் பின் வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் சமநிலை முடிவுக்கு போராடினர். எட்டு ஓவர்கள் மீதமிருக்கவே இலங்கை அணி வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் ஆரம்பம் தொடர் பிரச்சினை கதையாகவே உள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ன போர்முக்குத் திரும்பியுள்ளார். தொடரில் கூடுதலான ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கருணாரட்ன தொடர் நாயகனாகவும் தெரிவானார். ஆனால் கௌஷால் சில்வா இந்தத் தொடரில் கைவிட்டு விட்டார். நீண்ட நாளாகவே இவர்கள் இருவரும் ஒருமித்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவது குறைவாகவே உள்ளது.

மூன்றாமிடத்தில், குசல் பெரேரா கன்னிச் சதத்தைப் பெற்றார். நான்காமிடத்தில் குஷால் மென்டிஸ் துடுப்பாடினார். குஷால் மென்டிஸ் இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றிருக்க வேண்டும். இவர் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து எதிர்கால வீரராக வர்ணிக்க முடியுமா? இன்னமும் அவர் செய்து காட்ட வேண்டும். இவ்வாறான சிறிய அணிகள் கிடைக்கும் போது வெளுத்து வாங்க வேண்டும். சிறிய அணிகளுக்கு எதிராக பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறும்போது நம்பிக்கை கிடைக்கும். அடுத்த இடங்களில் துடுப்பெடுத்தாடிய இருவரும் அதையே செய்துள்ளனர். உபுல் தரங்க மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டார். அடித்த சதம், மத்திய வரிசையில் அவருக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. இந்தத் தொடரை வைத்து அணியைத் தெரிவு செய்தால், சந்திமால், மத்தியூஸ் மீண்டும் அணிக்குள் வரும் போது குஷால் மென்டிஸ் தான் அணியால் நீக்கப்படும் தெரிவு.

இந்தத் தொடரில் முக்கிய வீரர்கள் இருவர். தனஞ்சய டி சில்வா, அசேல குணரட்ன ஆகியோரே அவர்கள். இருவரும் சதங்களை அடித்துள்ளதுடன் சராசரியாக ஓட்டங்களைப் பெற்றுள்ளார்கள். தனஞ்சய டி சில்வா ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்களைக் குவித்து வரும் வேளையில் அணியில் புதிதாக இணைக்கப்பட்ட அசேல குணரட்ன ஓட்டங்களைப் பெற்றமை எதிர்கால வீரர் ஒருவர் தயாராக இருக்கின்றார் என்பதனை நிரூபித்துள்ளது.

ஆனால் இவரின் பந்து வீச்சை ஏன் பாவிக்கவில்லை என்பது இங்கே யோசிக்க வைக்கின்றது. இவர் ஒரு மித வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர். முதற் தர போட்டிகளின் பெறுதிகள் இவரை ஒரு முழுமையான சகலதுறை வீரராகவே காட்டுகின்றன. இவரின் மித வேகப்பந்து வீச்சு சரியாக பாவித்தால் இலங்கை அணியின் பந்து வீச்சு மேலதிக பலம் பெறும். தனஞ்சய டி சில்வா, அசேல குணரட்ன ஆகியோரின் பந்துவீச்சை சரியாக இலங்கை அணி பாவிக்க வேண்டும். ரங்கன ஹேரத் நான்கு இனிங்ஸிலும் கூடிய ஓவர்கள் வீசியுள்ளார். ஓய்வு தேவையான வீரர். வயதானவர். இவ்வாறான போட்டிகளில் தன்னுடைய பந்து வீச்சை குறைத்து இள வயது வீரர்களை, புதிய வீரர்களை பந்து வீச்சு வாய்ப்புகளை வழங்கி அவர்களுக்கான நம்பிக்கையை வழங்க வேண்டும்.

பந்துவீச்சில், வழமை போன்றே ரங்கன ஹேரத் விக்கெட்டுகளை அள்ளிக் குவித்துள்ளார். சிறந்த பந்து வீச்சுப் பெறுதியை இரண்டாவது போட்டியில் பெற்றுக்கொண்டார். போட்டியில் 13 விக்கெட்களையும், இனிங்ஸில் எட்டு விக்கெட்டுகளையும் பெற்றார். அணியின் தலைவராக ஒரு போட்டியில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் இவர். ஓர் இனிங்ஸில், தலைவராக ஒன்பது விக்கெட்டுகளை கபில் தேவ் கைப்பற்றியுள்ளார். எட்டு விக்கெட்டுகளை ஏற்கெனவே இருவர் கைப்பற்றியுள்ளார்கள். இலங்கை சார்பாக இது புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது.