இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: ராமேசுவரம் மீனவர் பலி-தமிழக அரசு கண்டனம்

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று இரவு (திங்கள்கிழமை இரவு) துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

ராமேசுவரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் மீன்பிடிக்க நேற்று மாலை கடலுக்குச் சென்றனர். இவர்கள் இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ (21) என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை கைவிட்டு அவசர அவசரமாக கரைக்குத் திரும்பினர்.

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு மீனவர் சரன் காயமடைந்தார்.

கடலோர காவற்படைக்கு தகவல்:

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் மீனவ சங்க தலைவர்கள் பி.சேசு ராஜா மற்றும் எமிரேட்டை தொடர்பு கொண்ட மீனவர்கள் சம்பவம் குறித்து தெரிவித்திருக்கின்றனர். மேலும், கடலோர காவற்படைக்கு தகவல் தெரிவித்து தங்களை காப்பாற்றுமாறும் கோரியிருக்கின்றனர். ஆனால், கடலோர காவற்படை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்ததால், மீனவர்கள் அங்கிருந்தே தப்பி வந்துள்ளனர்.