இலங்கை அதிபர் ‘பகீர்’ – இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் !!

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் போர்ச் சூழலில் பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்படுகின்றனர். போரில் வெற்றி பெருவோர், மாயமானவர்கள் குறித்து எந்த கருத்தும் கூறாமல், எப்போதும் மவுனமாகவே இருந்து வருகின்றனர். மாயமானவர்களின் உண்மை நிலை அறிய, பலரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்கள் ஒரு கட்டத்தில், ஐ.நா.,வின் பார்வைக்குச் செல்கையில், ஐ.நா., தன் பிரதிநிதிகள் மூலம் விசாரணையைத் துவக்கும்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே, 30 ஆண்டுகளாக போர் நீடித்தது. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகினர். ‘மாயமானவர்கள் இலங்கைப் பாதுகாப்புப் படைகளிடம் உயிருடன் இருப்பர்’ என, உறவினர்கள் நம்புகின்றனர். ‘மாயமானவர்களின் உண்மை நிலை என்னவென்று அரசு அறிவிக்க வேண்டும்’ எனக் கூறி, உறவினர்களும் சில மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், இலங்கைப் பாதுகாப்புப் படையிடம் மாயமானவர்கள் உள்ளனர் என்பதை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில், ஐ.நா.,வின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கருடன், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சந்திப்பு நிகழ்ந்தது. அதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த போரில் மாயமானவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். அவர்கள் போரில் இறந்துவிட்டனர்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை. இதனால், மனித உரிமை அமைப்புகளும், மாயமானவர்களின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ள கருத்துக்கு, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள், தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளதாவது: போர்க் காலத்தில் காணாமல் போன தமிழர்கள், இறந்து விட்டதாகக் கூறுவதற்கான அடிப்படை ஆதாரங்களும் காரணங்களும் என்ன என்பதை, அதிபர் கோத்தபய ராஜபக்சே விளக்க வேண்டும். காணாமல் போன ஒவ்வொருவர் குறித்தும், தனிப்பட்ட முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதா. அப்படி விசாரணை நடத்தப்பட்டிருந்தால், யாரால், எப்போது நடத்தப்பட்டது என்பதையும், அதன் முடிவுகளையும் அரசு தெரிவிக்க வேண்டும்.

எந்த ஆதாரமும் ஆவணமும் வெளியிடாமல், 20 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்து விட்டார்கள் எனப் பொதுப்படையாகக் கூறுவது, கடமையைத் தட்டிக்கழிப்பதாக உள்ளது. போர்க் காலத்தில் மட்டுமின்றி, போர் ஓய்ந்த பின்னரும் தமிழர்கள் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலைமை என்ன. இறுதிக் கட்ட போரின் போது ராணுவத்திடம் நான் ஒப்படைத்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, இலங்கை அரசுக்குப் பல்வேறு கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்.