இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

இலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு எனப்படும் எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்று புதன்கிழமை 87-வது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.

தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார்.
1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான ” தினக்கதிர் ” நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.
யாழ்பாணத்தில் வெளிவந்த ” ஈழமுரசு “பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்திய அமைதிப்படையினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது அனுபவத்தை ” ஈழ மண்ணில் ஓர் இந்திய சிறை ” என்ற தலைப்பில் எழுதினார்.
இந்த கட்டுரை “ஜுனியர் விகடன் ” இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.
இலங்கை தமிழ் பத்திரிகை உலகில் கோபு ,எஸ்.எம்.ஜி என பலராலும் அறியப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் ஆணித்தரமான அரசியல் தலையங்கங்கள், கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக விளங்கினார்.