இலங்கையில் மழை வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த மழை இன்று சற்று குறைந்திருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என இன்று மாலை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

17 மாவட்டங்களில் இந்த சீரற்ற காலநிலை நிலவுகிறது. மழை வெள்ளத்தினால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. இவற்றில் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 6,000 திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 80 திற்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, காலி, குருநாகல், மொனராகலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களும் அடை மழை, வெள்ளம், மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மலையகத்தில் ஆங்காங்கே மண் மேடுகள் சரிந்துள்ளன. இங்கு பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவும் பிரதேசங்களில் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த வரும் நாட்களில் வானிலையில் எவ்வாறான மாற்றம் இருக்கும் என இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரியொருவரிடம் கேட்டோம்.

அடுத்த சில தினங்களுக்கும், தென் மேல் பருவப் பெயர்ச்சியினால் நாட்டில் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

‘அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிப் பதிவாகும் ஏது நிலை இருக்கிறது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளையும் மழை பெய்யக்கூடும்.” என்று அந்த அதிகாரி கூறினார்.

இதேவேளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால், இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, எஹெலியகொடை, கிரியுல்ல ஆகிய பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. மக்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் தடை செய்யப்பட்டதாக மின்வலு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக, கொழும்பில் இருந்து சிலாபம் வரையிலான பொதுப் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கடுவலை என்ற அதிவேக நெடுஞ்சாலை இன்று மூடப்பட்டிருந்தது. கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இரத்தினபுரி – கலவானை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 9 கர்ப்பிணித் தாய்மார் உள்ளிட்ட 172 பேரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 6 கர்ப்பிணித்தாய்மார் கலவான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சிகளில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மழை வீழ்ச்சி சற்று குறைந்திருந்ததால் ஆறுகளின் நீர்மட்டம் சற்று குறைந்திருந்தது. எனினும், அடுத்த சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளதால், பொதுமக்களை அவதானமாக செயல்படுமாறு இடர்முகாமைத்துவ மையம் கேட்டுக்கொண்டுள்ளது.