இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஆபத்து வருகின்றதாம்

தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது போன்று உத்தேச புதிய அரசியலமைப்பிலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுமென அரசாங்கத்தினால் கூறப்படுகின்றபோதும் உத்தேச அரசியலமைப்பில் சில விடயங்கள் மூலம் பௌத்தத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை இல்லாது செய்யப்படவுள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்;

பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையிலும், ஒற்றையாட்சியிலும் கை வைக்க மாட்டோம் என ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி உத்தரவாதமளித்துள்ளனர். ஆனால் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த செயற்பாட்டு குழுக்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இல்லாது செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் ஜயம்பதி விக்கிரமரட்ன அவ்வாறு முன்னுரிமை இல்லாது செய்யப்படாது எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவரையும் அவருடன் இருப்பவர்களையும் நான் விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

எவ்வாறாயினும் உத்தேச அரசியலமைப்பில் சில விடயங்களை பார்க்கும் பௌத்த மதத்திற்கு உரிய முன்னுரிமை இல்லாது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் முதலாம் பிரிவில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ள போதும் இரண்டாவது பிரிவில் சகல மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது பிரிவில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இரண்டாது பிரிவில் எடுத்துக்கொள்கின்றனர். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சகலருக்கும் மதங்களை கற்பிக்கும் உரிமை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கும் தமது மதங்களை இங்கு போதிக்க முடியுமென்றே கூறுகின்றது.

இதேவேளை ஒற்றையாட்சியிலும் , பௌத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையிலும் கை வைக்க மாட்டோம் என ஜனாதிபதியும் பிரதமரும் கூறி வருகின்றனர். அப்படியென்றால் ஏன் இருக்கும் பிரிவுகளை மாற்ற வேண்டும். இதில் ஏன் நுழைய வேண்டும். அதனை செய்யாது இருக்கலாம் தானே. என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கிறிஸ்தவ கர்த்தினாலும் அமைச்சர் மனோகணேசனும் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை பேணப்பட வேண்டுமென கூறுகின்ற போதும் பௌத்தர்களை பாதுகாக்கவென கூறும் சம்பிக்க ரணவக்க அது இருக்க வேண்டுமென அவசியமில்லையென கூறுகின்றார். இதன் மூலம் சில விடயங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது எனவும் தெரிவித்தார்.