இலங்கையில் புதிய கட்சி தொடங்கினார் கருணா

இலங்கையில் உள்நாட்டுப்போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரண் செயல்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினார்.

கடந்த 2009-ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவரானார். ராஜபக்ச ஆட்சியின்போது துணை அமைச்சராக பதவி வகித்தார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா வசம் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து கருணா விலகினார். அமைச்சராக இருந்தபோது அரசு வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் கடந்த நவம்பரில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்நிலையில் தமிழ் ஐக்கிய சுதந்திர கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை கருணா தொடங்கியுள்ளார். மட்டக்களப்பில் அவர் நிருபர்களிடம் பேசியபோது, வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தனது கட்சி நிரப்பும் என்று அவர் கூறியுள்ளார்.