இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் விலைகளையும் அதிகரிக்கரிக்கலாம்

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை கடந்த திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பிரதானமாக சோற்று பார்சல்,தேநீர் மற்றும் சிறிய வகை உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பொருட்களின் விலைகளை எத்தனை ரூபாவினால் அதிகரிப்பது என்பது தொடர்பாக இது வரை தீர்மானிக்கவில்லையெனவும் இது தொடர்பாக விரைவில் தீர்மானம் மேற்கொண்டு அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 110 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் 44 ரூபாவினாலும் 2.3 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.