இலங்கையில் கோவிட் பரவல், பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்: அமெரிக்கா விடுக்கும் பயண எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாகலாம் என்றும் தீவிர பயங்கரவாதம் தொடர்பாகவும் கவனமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண அறிவுறுத்தலில், இலங்கைக்கு செல்லும் முன்பு சில விஷயங்களை அமெரிக்கர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் தீவிரமாகும் கொரோனா பரவல் காரணமாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் இந்த சுகாதார எச்சரிக்கையின் நிலை நான்காக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தூதரக அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

எவ்வித எச்சரிக்கைக்கும் இடம் கொடுக்காமல் இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து முனையங்கள், சந்தைகள், ஷாப்பிங் மால்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், மன்றங்கள், முக்கிய விளையாட்டு, கலாசாரம் மற்றும் கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்கள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் தூதரக பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் தொலைதூர பகுதிகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அவசர கால உதவிகளை வழங்க குறைவான வளங்களே தற்போது அமெரிக்க அரசிடம் உள்ளதாகவும் அந்த தூதரக பயண அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.