இலங்கையில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி புத்த சமூகத்தினர் போலீஸ் நிலையம் முன் போராட்டம்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே புத்த சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி 41 வயதான ஒரு சிங்களர் தாக்குதலுக்கு உள்ளானார். இரு ஆட்டோக்கள் மோதியதில் ஏற்பட்ட சம்பவத்திலேயே அவர் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிறு இரவு அவர் மரணமடைந்தார். இதை தொடர்ந்து திஹன பகுதியில் வன்முறைகள் தொடங்கின.

தெல்தெனிய பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் சிலரே அவரை தாக்கியதாக கூறி, திஹன பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகள் உட்பட சொத்துக்களை தாக்கி தீவைத்து எரித்தனர்.

இதை தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. திங்கட்கிழமையும் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனையடுத்து கண்டி மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

தெல்தெனிய போலீசார் வன்முறை தொடர்பாக 24 பேரை கைது செய்துள்ளனர். கடந்த வாரம் இது போல் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கடைகளும், பள்ளிவாசலும் தாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. நேற்றைய தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள் உட்பட முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகும் தாங்கள் தங்கியிக்கும் வீடுகளின் மீது இரவு வேளையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மோதல் வெடித்தது. கண்டியில் இஸ்லாமியருக்கு சொந்தமான கடைகளில் புகுந்து ஒரு கும்பல் தீ வைத்து உள்ளது. நேற்று மாலையில் இருதரப்புக்கு இடையிலான மோதல் அதிகரித்து காணப்பட்டது. போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்றபோது சாம்பலில் இருந்து இஸ்லாமியர் ஒருவரின் சடலத்தை எடுத்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷா நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே புத்த சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.