இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும்

தமிழின் பெருமை பற்றி பேசும் ராகுல் இலங்கையில் இனஅழிப்பு போர் நடத்தியதற்கு காங்கிரஸ் துணைபோன போது எங்கே போனார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு குஷ்பு பதிலளித்துள்ளார்.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏன் மேடம், அரைச்ச மாவே திரும்ப திரும்ப அரைக்கறீங்க. இதில் மெர்சலைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதனால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன சம்மந்தம். நிஜப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம்.

எங்களிடம் மோடி இருக்கிறார், டிரம்பால் கூட எங்களை எதுவும் செய்ய முடியாது என்று சொன்ன அதிமுக அமைச்சருக்கு பதில் சொல்லுங்கள். தமிழகத்தின் உண்மையான பிரச்சினை டெங்கு. அது பலரை தினம் தினம் சாகடிக்கிறது. அது அதிமுகவின் மிகப்பெரிய தோல்வி. எப்படி மக்களைக் காப்பாற்றுவது என்று எல்லோரும் சேர்ந்து பேசுவோம்.

சட்டம் ஒழுங்கு இல்லை. தமிழகத்தில் வளர்ச்சி இல்லை. முதல்வர் ஈபிஎஸ் வளர்ச்சி பற்றி பேசுகிறார். எப்போ, எங்கே, யாருடைய வளர்ச்சி? கண்டிப்பாக மக்களிடம் இல்லை. அதை பற்றிப் பேசுங்கள். ஒரு கட்சியாக திரைப்படத்தில் இருக்கும் 2 வசனங்களைக் கூட உங்களால் தாங்க முடியவில்லை என்றால், மன்னித்துவிடுங்கள், நீங்கள் அவ்வளவு பயத்தில் இருக்கிறீர்கள். மோடி அவர்களின் நண்பர் ஒபாமா சொன்னதைப் படியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, மெர்சல் படத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்திருந்த நிலையில், தற்போது குஷ்பு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.