இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 6 ஆட்டங்களும் ஒரே இடத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அனேகமாக கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதனிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான ஷிகர் தவான், கடந்த இரண்டு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார். தற்போது பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல்.-ல் ரன் குவிப்பில்( (8 ஆட்டத்தில் 380 ரன்கள்) முதலிடத்தில் இருக்கிறார். அது மட்டுமின்றி தற்போதைய அணித்தேர்வுக்கு உள்ள வீரர்களில் மூத்த வீரர் தவான் தான். இந்திய அணிக்காக கடந்த 8 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்கள்:-

ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூரியகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (வி.கீப்பர்), எஸ் சாம்சன் (வி.கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ஆர். சஹார், கே கவுதம், குர்ணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சி. சகரியா