இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்

இரட்டை விளக்கு மின் கம்பத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர் என்றும், மற்றொரு விளக்கு ஜெயலலிதா எனவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் புது விளக்கம் கொடுத்தார்.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கான பூமிபூஜை, பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமர் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தலைமை தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கான பந்தக்கால் நட்டார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எங்களது தேர்தல் சின்னம், மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்டது. எங்களது சின்னமான இரட்டை விளக்கு மின் கம்பத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொரு விளக்கு ஜெயலலிதா. இரண்டு விளக்குகளும் ஒளி விளக்காக மாறி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைக்கும்

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம், விருப்பம். எனவே, இத்தேர்தலை முறையாக நல்லபடியாக நடத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.