இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன்- சுகேஷ் தொலைபேசி உரையாடல் பதிவு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- குரல் மாதிரி சோதனை நடத்த முடிவு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவை டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்துள்ளனர்.

அதிமுக துணை பொதுச் செய லாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லி சாணக்யாபுரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 22-ம் தேதி டிடிவி தினகரன் ஆஜர் ஆனார். அன்று முதல் தினமும் டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினகரன் ஆஜராகி வருகிறார். நேற்று 4-வது நாளாக ஆஜர் ஆனார். அவரிடம் நேற்றும் பல மணி நேரம் விசாரணை நடந்தது. டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனன், உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் 4 நாட்களாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடைத்தரகர் சுகேஷ் யாரென்றே தெரியாது என்று தினகரன் கூறி வந்தார். இந்நிலையில் இருவரும் பேசிய தொலைபேசி உரையாடல்களை தின கரனிடம் போலீஸார் போட்டுக் காட்டி னர். அதன் பின்னரே சுகேஷிடம் பேசி யதை தினகரன் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கொச்சி, பெங்களூர், டெல்லி ஓட்டல்களில் இருந்து ஏராள மான கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீஸார் எடுத்துள்ளனர். இதில் தினகரனும், சுகேஷும் சந்தித்து பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதையும் தினகரன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இடைத்தரகர் சுகேஷின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் சுகேஷை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், சுகேஷிடம் மேலும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி போலீஸார் மனு கொடுத்தனர். அதை விசாரித்த நீதிபதி போலீஸ் காவலில் விசாரிக்க 3 நாள் அனுமதி கொடுத்தார்.

மேலும், இத்தனை நாள் நடந்த விசாரணை விவரங்களின் அறிக்கை களையும் நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்தனர். அப்போது தினகரன்-சுகேஷ் இருவரும் போனில் பேசிய உரையாடல் பதிவையும் நீதிமன்றத்தில் போலீஸார் கொடுத்தனர். அப்போது நீதிபதி, ‘‘டிடிவி தினகரன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கேட்டார்.

அவர் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசா ரணை நடந்து வருவதாக போலீஸார் பதில் கூறினர். நீதிமன்றத்தில் இருந்து சுகேஷை போலீஸார் வெளியே அழைத்து வந்தபோது, அங்கிருந்த நிருபர்களை பார்த்து, ‘‘டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது, என் மீது போலீஸார் பொய்யாக நட வடிக்கை எடுத்துள்ளனர்’’ என்று சுகேஷ் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

டிடிவி தினகரனுக்கு வழக்கறிஞர் குமார் என்பவர்தான் சுகேஷை அறி முகப்படுத்தி உள்ளார். சுகேஷ் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருப் பதால், அதில் சுகேஷின் வழக்கறிஞராக குமார் ஆஜராகியுள்ளார். வழக்கறிஞர் குமாரிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

குரல் மாதிரி சோதனை

தினகரன்-சுகேஷ் இருவரின் உரையாடல் செல்போன் பதிவை ஆதாரமாக சேர்த்திருப்பதால், இரு வருக்கும் குரல் மாதிரி சோதனை நடத்த டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.