இரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார். இரட்டை இலையை மீட்போம் என்று தீபா சூளுரைத்துள்ளார்.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன். எந்த நிலையிலும் பின்வாங்கமாட்டேன் என்றும் தீபா கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேசியதாவது:

”ஜெயலலிதாவின் பணிகளை அரசியல் வாரிசாகத் தொடர்வேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அரசியல் பயண முடிவை அறிவிப்பதில் பெருமையாக உள்ளது. இரட்டை இலையை மீட்பதே எங்கள் குறிக்கோள்.

தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. ஒரு துரோகக் கூட்டத்தின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன். எந்த நிலையிலும் பின்வாங்கமாட்டேன்.

தீபக்கின் நிலைப்பாடு தெளிவற்ற நிலையில் உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். ஆதரவளித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி” என்றார் தீபா.

இதனிடையே எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொடியை தீபா அறிமுகம் செய்தார். கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற கொடியின் மையத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செங்கோல் கொடுத்த புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.