இந்துக்களுக்கு புகழாரம் – நமஸ்தே சொல்லும் டிரம்ப்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் சந்தித்து கொண்ட போது, இருவரும் கைகுலுக்காமல், இந்து பாரம்பரிய முறைப்படி வணக்கம் (நமஸ்தே) தெரிவித்து கொண்டனர்.

சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஈரானில் ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், கொரோனா அச்சுறுத்தலை தடுக்க முகமூடி அணியவும், கைகுலுக்குவதை தவிர்த்து, வணக்கம் தெரிவிக்க வேண்டும். சற்று இடைவெளி விட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் கூட, கொரோனா பரவுதலை தடுக்க இந்தியர்களை போல் நமஸ்தே சொல்ல வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் அமெரிக்கா சென்றுள்ளார். இவர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். ஓவல் அலுவலகத்தில் டிரம்ப்பும், லியோ வரத்கரும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கவதை தவிர்த்துவிட்டு, வணக்கம் தெரிவித்து கொண்டனர்.

பின்னர் டிரம்ப் கூறுகையில், இன்று நாங்கள் கைகளை குலுக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நாங்கள், நாம் என்ன செய்ய போகிறோம் என்று. அது ஒரு வித்தியாசமான உணர்வு. நான் சமீபத்தில் தான் இந்தியா சென்று வந்தேன். அங்கு யாருடனும் நான் கைகுலுக்கவில்லை. அது மிகவும் எளிதானது. ஏனென்றால் அவர்கள் இவ்வாறு தான் பழக்கி இருக்கிறார்கள். (கைகூப்பி நமஸ்தே செய்து காண்பித்தார்) ஜப்பானியர்கள் தலை வணங்கி வரவேற்கின்றனர் (அவ்வாறு செய்து காண்பித்தார்) எனக்கூறிய டிரம்ப், நவேடா, கொலரோடாவில் நடக்க உள்ள கூட்டங்களை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.