இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

வலுவான அரசாக இருந்து கொண்டு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அதிக அளவு வளர்ச்சி ஆற்றல் உள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி வரும் 2017-2018 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) போன்றவற்றால் துவக்கத்தில் பின்னடைவை இந்தியா எதிர்கொண்ட போதிலும், 2017-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும் சர்வதேச பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ் அளித்த பேட்டியில், ”இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டும். குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் தனது திறனைக் காட்டிலும் சிறந்ததை எதிர்பார்க்கலாம். சீனாவோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் ஆரோக்கியமான சூழலில் உள்ளது.

2017 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி, 6.8 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் வளர்ச்சியை விட 0.1 சதவீதம் அதிகமாக பெற்றிருந்தது. 2018 ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 6.3 சதவீதம் மற்றும் 6.2 சதவீதமாக குறையும்.

இந்தியா தனது ஆற்றலை செயல்படுத்த முதலீட்டு வாய்ப்புகளை பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.ஜி.எஸ்.டி விஷயத்தில் இந்திய அரசு மீகவும் தீவிரமாக உள்ளது. இது மிகப்பெரிய திருப்பு முனையாகும். வங்கிகள் மறுமூலதனமாக்கும் செயலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்றார் கோஸ்