இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் !!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில், பலரும் பங்கேற்றதே காரணம் என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டில்லி நிஜாமுதீனில், கடந்த மார்ச் மாதம் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்க, 35 நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் வந்தனர். அதில் பலருக்கு, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் பலர், விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விசா விதிமுறை மீறலில் ஈடுபட்ட, 2,765 பேர் மீது, 11 மாநிலங்களில், 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராஜ்யசபாவில் தப்லிகி ஜமாத் குறித்த கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிஷன் ரெட்டி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: டில்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில், கொரோனா விதிமுறைகளை மீறி கூடியிருந்த 236 பேரை போலீசார் கைது செய்தனர். 2,361 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

டில்லி அரசு விதித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, சமூக விலகலை கடைபிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், மாஸ்க் அணியாமல் ஒன்றாகக் பலர் கூடியிருந்தார்கள். தப்லிகி ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு, தப்லிகி ஜமாத் மாநாடும் ஒரு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.