இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

எங்கள் அணியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இந்தியாவிலேயே இதுவரை எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எங்கள் முதல் எதிரியே தி.மு.க.தான். எங்கள் பிரசாரம் அவர்களுக்கு எதிராகத்தான் அமையும். ஆர்.கே.நகரில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார்.

அப்போது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிப்பார். சசிகலாவும், தி.மு.க.வும் குடும்ப அரசியல் செய்கிறார்கள். குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதுதான் எங்கள் அணியின் குறிக்கோள்.ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கள் அணியின் கை ஓங்கி வருகிறது. அதனால்தான் மு.க.ஸ்டாலின் எங்கள் மீது பாய்கிறார்.முரண்பாடுகளின் முழு உருவமாக தி.மு.க. விளங்குகிறது.

முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது பா.ஜ.க. நிர்ப்பந்தத்தால் தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்று கூறுவது உண்மை இல்லை. அப்போது ஓ.பி.எஸ்.சை விட்டால் வேறு யாரும் ஆள் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். ஓ.பி.எஸ். அணியில் எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகன் தீபன் இன்று இணைந்தார்.