இந்தியர்களின் தகவல்கள் வெளியானது தொடர்பாக பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது என்பது தொடர்பாக விளக்கம் கோரி பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்து உள்ளது.

‘பேஸ்புக்’ பயனாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டு உள்ளன. இந்த திருட்டில் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தி உள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகிறார்கள். “இந்தியர்களின் தகவல்கள் விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் சமரசம் செய்துக் கொண்டது என்பது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும்,” என இந்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.

இந்தியாவில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் சேவையை பெறுபவர்கள் யார்? என்பது தொடர்பாக அந்நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியது. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்திய இந்தியர்கள் குறித்த விபரங்களை மார்ச் 31-க்குள் அளிக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்து உள்ளது. விபரங்களை அளிக்க தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு நோட்டீஸில் முக்கியமாக 6 கேள்விகளை எழுப்பி உள்ளது.

இப்போது இந்தியர்களின் தகவல்கள் வெளியானது என்பது தொடர்பாக விளக்கம் கோரி பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்து உள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை பேஸ்புக்கிற்கு ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் விடுத்து உள்ளது. இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் பகிர்ந்துக்கொள்ளப்பட்டதா? என்பது உள்பட்ட கேள்விகளுடன் விளக்கத்தை மத்திய அரசு கோரி உள்ளது.