இங்கிலாந்து: ஒருநாள் போட்டியில் மெகா சாதனை

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த 3-வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2016-ம் ஆண்டு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது இங்கிலாந்து தனக்கு தானே அந்த சாதனையை முறியடித்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேஷன் ராய், பேர்ட்ஸ்டோவ் அதிரடி துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. தொடர்ந்து ஹேல்ஸ் அதிரடி ஆட்டம் ஆட ரன்ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது. போர்ஸ்டோவ்(139), ஹேல்ஸ்(147) சதம் விளாசினர். 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன் எடுத்த இங்கிலாந்து அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அடில் ரஷித், மொயின் அலி சுழலில் சிக்கி சிதைந்தது. 37 ஓவரில் 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா, 242 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ஹெட் 51 ரன் எடுத்தார். இங்கிலாந்தின் அடில் ரஷித் 4, மொயின் அலி 3 விக்கெட் வீழ்த்தினர்.