ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது

‘இந்திய அணியில் கோஹ்லி இல்லை, இனி அவ்வளவு தான், தொடரை முழுமையாக தோற்கும்,’ என பலரும் ஏளனமாக பேசினர். தற்போது தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. இரண்டாவது நாள் முடிவில் 62 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட்டுகளுடன் வலுவாக இருந்தது. மூன்றாவது நாள் போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்தில் அனைவரும் நடையை கட்ட, மூன்றாவது நாளில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்னுக்கு சுருண்டது. டெஸ்ட் அரங்கில் இது தான் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆனது. கடைசியில் 8 விக்கெட்டில் தோற்றது. ஆஸ்திரேலியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

* முதல் போட்டியுடன் கேப்டன் கோஹ்லி நாடு திரும்பினார். முகமது ஷமி காயத்தால் நாடு திரும்பினார். இனி ரகானே தான் கேப்டன். ‘இனி இந்தியா அவ்வளவு தான், டெஸ்ட் தொடரில் 0-4 என ‘ஒயிட் வாஷ்’ ஆகும்,’ என்றார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் பாண்டிங், மார்க் வாக்.
*’கோஹ்லி இல்லாமல் இந்தியா எப்படி பேட்டிங் செய்யும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை,’ என்றார் மற்றொரு முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

* ‘அடிலெய்டு டெஸ்டில் தோற்ற பின், இனி இந்தியா மீண்டு வருவது சிரமம்,’ என்றார் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் (ஆஸி.,).

ஆனால் மெல்போர்னில் இரு இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா 195, 200 ரன்கள் தான் எடுத்தது. கேப்டனாக களமிறங்கிய ரகானே சதம் அடிக்க இந்தியா எழுச்சி பெற்றது. 8 விக்கெட்டில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. தொடர் 1-1 என சமன் ஆனது.

சிட்னி டெஸ்டில் உமேஷ் விலகினார். லோகேஷ் நாடு திரும்பினார். இம்முறை பேட்டிங்கில் சுதாரித்த ஆஸ்திரேலியா 338, 312/6 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி தந்தது. முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு சுருண்ட இந்தியா, இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்களை தாண்டாது என மீண்டும் வீராப்பு பேசினார் பாண்டிங்.

ஆனால் கடைசி நாளில் எழுச்சி பெற்ற இந்திய அணிக்கு அஷ்வின், ஹனுமா விஹாரி இணைந்து 42.4 ஓவர்கள் அவுட்டாகாமல் தாக்குப்பிடித்து, போட்டியை ‘டிரா’ செய்ய , எளிதாக வெல்ல நினைத்த ஆஸ்திரேலியா கனவு கலைந்தது. தொடர் 1-1 என சமனில் நீடித்தது.

உலகின் அதிவேக ஆடுகளம் என பெயர் பெற்றது பிரிஸ்பேனின் ‘காபா’. இங்கு கடந்த 33 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி தோற்றதே இல்லை. இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லை. நமது அணியில் அஷ்வின், ஜடேஜா, பும்ரா என பல சீனியர்கள் இல்லை.

முகமது சிராஜ் (3 போட்டி), ஷர்துல் தாகூர் (2 போட்டி), நவ்தீப் சைனி (2), நடராஜன் (1), வாஷிங்டன் சுந்தர் (1) என சாதாரண இளம் பவுலர்களுடன் களமிறங்கியது இந்தியா.

பேட்டிங்கில் இத்தொடரிலேயே அதிக ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா (369). இந்திய அணியை குறைவான ரன்னுக்கு சுருட்டி, முதல் இன்னிங்சில் அதிக முன்னிலை பெற நினைத்த ஆஸ்திரேலிய ஆசைக்கு வாஷிங்டன் சுந்தர் (62), ஷர்துல் (67) இணைந்து பெரிய ‘அணை’ போட்டனர். முதல் இன்னிங்சில் இந்தியா (336) 33 ரன்கள் மட்டும் பின் தங்கியது.

இரண்டாவது இன்னிங்சில் வேகமாக ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா (294) இந்தியாவுக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சிராஜ் 5 விக்கெட் சாய்த்தார்.

இம்முறை பேட்டிங்கில் சுப்மன் கில் (91) மிரட்டினார். புஜாரா ஒருபக்கம் சுவராக நின்று ஆஸ்திரேலிய பவுன்சர்களை தன் உடலில் தாங்கிக் கொண்டார். கை, வயிறு, மார்பு, முன், பின் தலையில் என பல இடங்களில் பந்து தாக்கிய போதும் அசராமல் விக்கெட் சரிவை தடுத்தார்.

இவர் அவுட்டானதும் இனி போட்டி ‘டிரா’ தான் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடைசி நேரத்தில் ரிஷாப் பன்ட், வாஷிங்டன் சுந்தர் சேர்ந்து 53 ரன்கள் சேர்க்க, இந்தியா பக்கம் வெற்றி திரும்பியது. கடைசியில் ரிஷாப் (89) ஒரு பவுண்டரி அடிக்க, இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. தொடரை 2-1 என கைப்பற்றியது.

அன்னிய மண்ணில் 0-1 என தொடரில் பின் தங்கி இருந்த 34 டெஸ்ட் தொடர்களில் ஒருமுறை கூட இந்தியா கோப்பை வென்றது இல்லை. 31ல் தோற்றது. 3 தொடர்களை மட்டும் ‘டிரா’ செய்திருந்தது. முதன் முறையாக 0-1 என பின் தங்கிய இந்தியா, அன்னிய மண்ணில் எழுச்சி பெற்று கோப்பை வென்றது.