ஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும்

எத்தனையோ ஆண்டு காலமாக தென்னிலங்கையில் அமைந்துள்ள பாராளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் சிங்களக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் காலத்தைக் கடத்தி சி;ங்கள மக்களையும் ஏமாற்றி வருகி;ன்றார்கள். குறிப்பாக தற்போது ஆளும் தேசிய அரசாங்கத்தை அமைத்து செயற்படும் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்களே தவிர, சிங்கள மக்களுக்கு கூட பெரிதாக ஒன்று செய்து விடவில்லை. விலைவாசி அதிகரிப்பால், நடுத்தர மற்றும் ஏழை சிங்கள மக்கள்; பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் போராட்டங்களை அவர்கள் நடத்த முடியவில்லை.

இதைப்போலவே எமது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். தேர்தல் காலங்களில் வீர வசனங்களைப் பேசும் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன் அங்குள்ள சலுகைகள் மற்றும் சுகபோகங்கள் ஆகியவற்றைக் கண்டு மௌனமாக இருந்துவிடுகின்றார்கள். அதோடு மட்டுமல்லாது ஆட்சியில் உள்ளவர்கள் தரும் சலுகைகளை அனுபவிக்க தங்களுக்குள் போட்டி போடுகின்றார்கள். தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களும் அவரது சகாக்களும் இவ்வாறு தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாமல் அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் “சன்மானங்களும்” ஆகும்.

இது இவ்வாறிருக்க, இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் நடைபெறும் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்களால் எந்தவிதமான பலனும் கிட்டுவதாகத் தெரியவில்லை. அரசாங்கமோ அன்றி வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களோ எதனையும் செய்யாமல் நாட்களை கடத்துகின்றார்கள்.

இதன் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவு கிராமத்தில் தங்கள் சொந்தக் காணிகளை இராணுவத்திடமிருந்து பெற்றுக்கொள்ள போராட்டம் நடத்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விரக்தியடைந்த நிலையில் கொழும்பை நோக்கி நடைபயணம் ஒன்றை இன்று மேற்கொண்டு தற்போதைய ஜனாதிபதியும் செயலற்ற தன்மையுள்ளவருமான மைத்திரியைச் சந்திக்கவென செல்லுகின்றார்கள். இவர்களை சந்தித்து ஆறுதல் கூற கூட்டமைப்பின் தலைவர்கள் வருகின்றார்களோ என்னவோ, நாம் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைப்போமாக!