ஆர்.கே.நகர் யாருக்கு?- இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரங்கள் அனல் பறந்தாலும் ஆர்.கே.நகரில் யார் வெல்வார் எனபது கேள்விக்குறியாக உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி 1977 முதல் சட்டப்பேரவை தொகுதியாக உள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும் நேரடி போட்டியில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி அதிமுக, திமுக கூட்டணியில் தலா ஒருமுறை வென்றுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் அதிமுக வசமே ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது. 2001-ம் ஆண்டு சேகர் பாபு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 2006-ம் ஆண்டும் அவரே வென்றார். 2011-க்குள் அவர் திமுகவில் சேர்ந்தார். 2011 தேர்தலில் அதிமுகவின் வெற்றிவேல் வெற்றி பெற்றார். 2015-ல் இடைத்தேர்தலில் ஜெயலலிதா 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது.

அதன் பின்னர் முதலமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்த்தை பெற்ற ஆர்.கே.நகரில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2016 ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், எடப்பாடி அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிட்டனர்.

மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது என்று கூறப்பட்ட நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்துச்செய்யப்பட்டது. பின்னர் டிச.21 அன்று மீண்டும் இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. இம்முறை ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில், அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். டிடிவி தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நிற்கிறார். மருது கணேஷ் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.

குறைந்த கால அளவே இருந்ததால் அரசியல் கட்சிகள் வரிந்துக்கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டன. நடிகர் விஷால் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்து ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜக சார்பில் வேட்பாளரை தேடி பின்னர் கரு.நாகராஜனை நிற்கவைத்தனர். நாம் தமிழர்கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மீண்டும் நிற்கிறார்.

தேமுதிக தேர்தலை புறக்கணித்து விட்டனர். இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக திமுகவுக்கு ஆதரவை தெரிவித்துவிட்டன. பிரச்சாரத்தில் இரட்டை இலை கிடைத்த மகிழ்ச்சியில் அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் உற்சாகமாக இறங்கி வேலை செய்கின்றனர்.

டிடிவி தினகரன் பிரச்சாரம் மூலம் குறுகிய காலத்தில் தனக்குக் கிடைத்த குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்திவிட்டார். அவருக்கு பிரச்சாரத்தில் திரளும் கூட்டம், பெண்கள் கூட்டம் மற்றவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என உளவுத்துறை மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பும் அமளவுக்கு தொகுதியில் வேலை நடக்கிறது.

திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் மருதுகணேஷ் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற ஒரு தோற்றத்தை தொகுதியில் காண முடிகிறது.

பாஜக வேட்பாளருக்கு தமிழிசை மட்டுமே வரிந்துகட்டி வேலை செய்கிறார். பிரச்சாரத்தில் மாநில அரசைப்பற்றியோ, அதிமுகவை பற்றியோ பேசத்தயங்குகிறார். அதிகமாக டிடிவி தினகரனை விமர்சிப்பதால் பாஜக பிரச்சாரத்தில் உற்சாகம் இல்லை.

திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் கடைசி மூன்று நாட்கள் பிரச்சாரத்தில் இறங்கினார். இதனால், திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. இன்றிலிருந்து வெளி ஆட்கள் தொகுதியில் இருக்கக்கூடாது, வெளி  வாகனங்கள் எதுவும் தொகுதிக்குள் வரக்கூடாது. பூத்ஸ்லிப் வழங்குவது போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை மீது புகார்கள் கிளம்பியதை அடுத்து வடக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் மாற்றப்பட்டார். டெல்லியிலிருந்து தேர்தல் ஆணையம் நேரடியாக சுதாகரை மாற்றிவிட்டு போக்குவரத்து காவல் இணை ஆணையர் (தெற்கு) பிரேமானந்த் சின்ஹாவை நியமிக்கும்படி உத்தரவு போட்டது.

இன்று பிரச்சாரம் ஓய்ந்து நாளை ஒருநாள் மட்டுமே இடையில் உள்ளது. நாளை மறுநாள் (டிசம்பர் 21) காலையில் வாக்குப்பதிவு துவங்குகிறது. இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்த நிலையிலும், கடந்த 4 தேர்தலிலும் அதிமுகவே வென்றதாலும் தனக்கே வெற்றி என்ற நிலையில் மதுசூதனனும், தினகரன் வாக்குகளை பிரிப்பதாலும், அதிமுக ஆட்சியின் மீதுள்ள வெறுப்பும் திமுக வாக்கு வங்கி, கூட்டணி கட்சிகளின் ஆதரவு காரணமாக திமுகவே வெல்லும் என மருது கணேஷும் நம்பிக்கையுடன் களம் காண்கின்றனர்.

டிடிவி தினகரன் குறைந்தப்பட்சம் 10 ஆயிரம் வாக்குகளாவது தொகுதியில் வாங்கிவிடுவார் என்ற பேச்சு பரவலாக அடிபடும் நிலையில், அவ்வாறு அவர் வாங்கும் வாக்குகள் இந்த தேர்தலின் முடிவை நிச்சயம் தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது.