ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சசிகலா அணியில் கோகுல இந்திரா, ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டி?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சசிகலா அணியில் கோகுல இந்திராவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியுடன் முடிகிறது. இத் தேர்தலில் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் தவிர, ஜெய லலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தனியாக போட்டியிடு கிறார். சசிகலா அணியில் வேட் பாளரை தேர்வு செய்வதற்காக 15-ம் தேதி ஆட்சி மன்றக் குழு கூடுகிறது. ஓபிஎஸ் தரப்பும் புதிதாக ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளது.

நாங்கள்தான் உண்மையான அதிமுக என சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இதனால், தங்களின் செல்வாக்கை நிரூபிக்க ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகின்றனர். இதற்காக வலுவான வேட்பாளரை களமிறக்க இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியினர் முன்னாள் அமைச்சர் மதுசூதனனையும், சசிகலா அணியினர் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திராவையும் வேட்பாளராக நிறுத்த ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையே, ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அணியினர் ரகசிய சர்வே ஒன்றையும் நடத்தி, ஆதரவை கணித்துள்ளனர்.

இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் 80 சதவீதம் பேர் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். மதுசூதனன் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமானவர். ஏற்கெனவே 1991 தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்தார். ஆதி ஆந்திர மக்கள் 25 ஆயிரம் பேரின் வாக்குகள் இவருக்கு கிடைக்கும். கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு அதிகம் இருப்பதால், அவர் நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார்’’ என்றார்.

சசிகலா அணியை பொறுத்தவரை முதலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானது. இதை மறுத்த தினகரன், கட்சி விரும்பும் ஒருவர்தான் வேட்பாளர் என்றார். ஆனால், தற்போது முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுலஇந்திராவை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுகவில் ஏற்கெனவே போட்டியிட்ட சிம்லா முத்துச் சோழனுக்கு பதிலாக, கிரிராஜனை நிறுத்தலாமா என யோசித்து வருவதாக தெரிகிறது. தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் மதிவாணன் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ளார். பாஜக, கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கலாம் என்பதால் பலமுனைப் போட்டி உருவாகி யுள்ளது.