ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி வாக்காளர்களை களைந்து விட்டதாக தேர்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைதேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை ஒட்டி அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் காலியாக உள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் பணி துவங்கிய நிலையில் ஆர்.கே.நகரில் 44,999 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும் அதை நீக்கிய பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. மேலும் ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்ததாக வெளியான வருமான வரித்துறை பட்டியல் அடிப்படையில் அதில் உள்ள நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் 45 ஆயிரத்து 819 இரட்டைப்பதிவு செய்யப்பட்ட போலி வாக்காளர்கள் இனங்காணப்பட்டு நீக்கப்பட்டதாக தெரிவித்து திமுக தொடர்ந்துள்ள வழக்குகள் காரணமாக தேர்தலை அறிவிப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த திமுக வழக்கறிஞர் வில்சன் திமுகவின் கோரிக்கையே போலி வாக்காளர்களை களைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான். தற்போது போலி வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தலை நடத்திட வேண்டும் என்றார்.

தலைமை நீதிபதி அமர்வு, முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடக்க உள்ள நிலையில் இன்னும் எவ்வளவு நாட்கள் தொகுதியை காலியாக வைக்கப்போகிறீர்கள் வேறொரு வழக்கில் ஏற்கெனவே நாங்கள் டிச.31 க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த உத்தர்விட்டுள்ளோம். அந்த அடிப்படையில் டிச.31க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான அறிவிப்புகளை டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் பற்றிய விபரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.