ஆர்.கே.நகரில் வீடு, வீடாக வினியோகம் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததாக தி.மு.க.வினர் 12 பேர் கைது

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க.வினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பண மழையில் வாக்காளர்கள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அங்கு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பண மழையில் நனைந்து வருகின்றனர். அங்கு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பட்டுவாடா செய்த புகாரில் அ.தி.மு.க. அம்மா கட்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.15 லட்சத்துக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகர், சிவகாமி நகர், இந்திராநகர், சிவன் நகர் மற்றும் தண்டையார்பேட்டை நேதாஜிநகர், பாரதி நகர் உள்பட இடங்களில் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

கிரைண்டரில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம்…

இதையடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ், பாபு, முசிறி செந்தில், ஜெயசீலன், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கரிகாலன் உள்பட 8 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கரிகாலன் தனது வீட்டின் கிரைண்டரில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

24 மணி நேரமும் கண்காணிப்பு…

இதேபோல் தண்டையார்பேட்டை பகுதியில் பண வினியோகத்தில் ஈடுபட்டிருந்த பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, சேகர் உள்பட 4 பேரை பறக்கும் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பண வினியோகத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மூலம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.