ஆர்.கே.நகரில் தினம் ஒரு பரிசு.சங்கேத வார்த்தை, வீட்டு உபயோகபொருட்கள், தேர்தல் அதிகாரிகள் தவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா , தினம் ஒரு பரிசு, வீட்டு உபயோக பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் கமிஷனில் புகார்கள் குவிகின்றன.

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம் செய்யப்பட்டது. அந்த தொகுதியில் மொத்தம் சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 1 லட்சம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.

பணப்பட்டு வாடாவைத் தடுக்க தலைமை தேர்தல் கமிஷன் 35 பார்வையாளர்கள், 10 பறக்கும் படைகள் உள்பட பல ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் அவை அனைத்தையும் மீறி மிகத் திறமையாக பணப் பட்டுவாடா நடத்தப்பட் டுள்ளது. இதற்கு “சங்கேத வார்த்தை”யை பயன்படுத்தி உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர். அவர்களையும் திணறடிக்கும் வகையில் அந்த “சங்கேத வார்த்தை” இருந்தது. நேற்று மதியம் தான் அந்த சங்கேத வார்த் தையை தேர்தல் அதிகாரி களும் வருமான வரித்துறை அதிகாரிகளும் கண்டு பிடித்தனர்.

“சாமி கும்பிட்டாச்சா?” என்பதே அந்த சங்கேத வார்த்தையாகும். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள வெளியூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிரித்த முகத்துடன் அந்த பகுதி மக்களிடம் “என்ன… சாமி கும்பிட்டாச்சா?” என்றனர்.பெரும்பாலானவர்கள் “ஆமா… சாமி கும்பிட்டாச்சு” என்று கூறியபடி நகர்ந்தனர். டீ கடைகளில் இந்த சங்கேத வார்த்தை பரிமாற்றம் அதிகமாக கேட்டது.

பணத்தை பொதுவாக லட்சுமி என்று சொல்வார்கள். எனவேதான் பணப்பட்டு வாடாவில் ஈடுபட்டவர்கள் இந்த சங்கேத வார்த்தையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பணம் கிடைக்காதவர்கள், “இன்னும் சாமியையே காணோம்… எப்படி கும்பிடுவது?” என்று கூறி கொண்டிருக்கிறார்கள். எனவே ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அடுத்தக்கட்டமாக மீண்டும் ஒரு ரவுண்டு சாமி கும்பிட தயாராகி கொண்டிருக்கிறார்கள் .

ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா மட்டுமின்றி பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.பரிசுப் பொருட்களை ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாககொண்டு சென்று கொடுப்பதற்கு பதில் “டோக்கன்” முறையை கையாள்கிறார்கள். அந்த டோக்கனை வாக்காளர்கள் குறிப்பிட்ட சில கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்கிறார்கள்.
காதும், காதும் வைத்தது மாதிரி மிகவும் ரகசியமாக, ஆனால் மிக சாதுரியமாக இந்த பரிசுப் பொருட்கள் கை மாறுகிறது.

கடந்த வாரம் ஆர்.கே.நகரில் உள்ள குறிப்பிட்ட பகுதி பெண் வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கு, குத்து விளக்குகள் வழங்கப்பட்டது. சில பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங் கப்பட்டன.சில்வர் பாத்திரங்கள், காமாட்சி விளக்குகள் போன்றவற்றை சில பகுதி யினர் விரும்பவில்லை. அத்தகைய வாக்காளர் களுக்கு “கிப்ட் வவுச்சர்” வழங்கப்படுகிறது. அதை வைத்து வாக்காளர்கள் தங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்றவற்றையும் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த பரிசுகள் வினியோகத்திலும் புதுமையான முறைகையாளப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அந்த கட்சியைச் சேர்ந்த வெளியூர் நிர்வாகிகள், ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ஆங்காங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதி மக்களுடன் நெருங்கி பழகியுள்ளனர்.

அவர்கள்தான் இப்போது வீடு, வீடாக சென்று, உங்க வீட்டுக்கு என்ன வேணும்? வாஷிங்மெஷினா அல்லது பிரிட்ஜ்ஜா…. என்று கேட்டு, கேட்டு வாங்கிக் கொடுக்கிறார்கள். இவை மொத்தமாக செல்லாமல் தனி தனியாக வினியோகிக்கப்படுவதால் பறக்கும் படையினரால் தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், வருமான வரித்துறையினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சென்னையின் பிற பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வாஷிங்மெஷினும், பிரிட்ஜும் வரவழைக்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு தொகுதியில் இருக்கும் 4 திருமண மண்டபங்களிலும் பரிசுப் பொருட்கள் ரகசியமாக குவித்து வைக்கப்பட்டுள்ளதாம்.

அங்கிருந்து ஒரு தடவை 10 வீடுகளுக்கு மட்டும் பரிசுப் பொருட்களை எடுத்து வந்து கொடுக்கிறார்களாம். இது தேர்தல் அதிகாரிகளை தவிக்க வைத்துள்ளது.

பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்க, நுாதன முறைகளை, கையாளத் துவங்கி உள்ளனர். நேற்று முன்தினம், 38வது வார்டில் வீடுதோறும் சென்று, குத்துவிளக்கு பூஜைக்கு வரும்படி, பெண்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

பூஜைக்கு வந்தோருக்கு இரண்டு சேலைகள், வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு, தீபாராதனை தட்டு, மணி, துாபக்கால் என, பூஜை பொருட்கள், குங்குமம், விபூதி போன்ற வற்றை வழங்கினர்.குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தினம் ஒரு பரிசுப் பொருளை வழங்கி வருகின்றனர். ஒரு நாள், மளிகை பொருட்கள் வாங்க தொகை; ஒரு நாள் சேலை; ஒரு நாள் காமாட்சியம்மன் விளக்கு என, தினமும் ஒரு பரிசுப் பொருள் வழங்குகின்றனர்

குறிப்பிட்ட கட்சியின் வெளியூர் நிர்வாகிகள் ஒவ்வொரு தெருவிலும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரிடமும் கடந்த வாரமே பணப்பட்டு வாடாவுக்கான முழுத் தொகையும் ஒப்படைக்கப் பட்டு விட்டது. சிக்னல் வந்ததும் பணத்தை வாக்கா ளர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று அவர் களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

பணத்தை எப்படி கை மாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு உதவிகள் செய்ய ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த 10 உள்ளூர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.பணப்பட்டுவாடாவுக்கு இந்த 10 பெண்களின் பணிதான் முதுகெலும்பாக அமைந்திருந்தது.

ஒவ்வொரு தெருவிலும் முதல் கட்டமாக யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடுகளை அடையாளம் காட்டும் பணியை பெண்கள் குழுவுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

மேலும் பணப்பட்டு வாடா நடக்கும் போது தெரு முனையில் நின்று யாராவது வருகிறார்களா? என்பதை கண்காணிக்கும் மிக முக்கிய வேலையையும் இவர்களே செய்தனர். தேர்தல் பார் வையாளர்களோ, பறக்கும் படையினரோ, போலீஸ் காரர்களோ வந்தால், தங்கள் கையில் வைத்துள்ள கொடியை உயர்த்தி காட்டி அசைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.ஒவ்வொரு பகுதியிலும் இப்படி பத்து, பத்து பெண்கள் உதவியுடன் பணப்பட்டு வாடா ஜரூராக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.