ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டி: முதல்வராகும் திட்டமில்லை என பேட்டி

அதிமுக சசிகலா அணியின் சார்பில் சென்னை ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அதிமுக அவைத்தலைவர் செங்கோட்டையன், ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக டிடிவி.தினகரனை ஆட்சிமன்ற குழு கூடி ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், “ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதற்காக, ஆட்சிமன்ற குழுவுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக போட்டியிடவுள்ளேன். இந்தத் தேர்தலில் மட்டுமல்ல இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே.
ஆர்.கே.நகர் தேர்தலில் நிச்சயமாக அதிமுக மக்கள் பேராதரவோடு வெற்றி பெறும். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்” என்றார்.
முதல்வராகும் எண்ணமில்லை..
நிருபர் ஒருவர், தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக முதல்வராவீர்களா என்று கேள்வி எழுப்ப, “நிச்சயம் இல்லை. முன்னர் ஆட்சியும், கட்சியும் ஓரிடத்தில் இருக்க வேண்டும் சொல்லப்பட்டது. அது, அதிமுகவில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய சூழலால் எடுக்கப்பட்ட முடிவு. இனி, முதல்வர் எடப்படி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி நடைபெறும்” என்று பதிலளித்தார்.

23-ல் வேட்புமனு தாக்கல்:
மேலும் அவர் கூறும்போது, “வருகின்ற 23-ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்கிறேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று ஜெயலலிதா அறிவித்த நலத்திட்டங்கள் அனைத்தையும் அத்தொகுதியில் நிறைவேற்றுவேன். தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” என்றார்

திமுக மட்டுமே போட்டி
“ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக மட்டுமே அதிமுகவுக்கு போட்டி. ஓபிஎஸ் அணி ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பின்னர் முடங்கிப்போய்விடும். ஓபிஎஸ்., ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து வருகிறார். இத்தேர்தலில் மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் அதிமுகவுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.