ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ

மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியைத் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படுவதாகவும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி அனுமதியளிக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர்கள், ”முந்தைய காலங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் விழா ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்ட பிறகே அனுமதி அளிப்பார். ஆனால் இப்போது எந்த விதிமுறைகளும் இல்லாமல் அனுமதி அளிக்கப்படுகிறது.

அம்மா வழியில் செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு, இந்தப் பேரணியை அனுமதித்து அவருக்கு துரோகம் இழைத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய ராஜூ, ”அக்டோபர் 8-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் பேரணியைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அத்தினத்தில் என்னுடைய அலுவல்களைப் பரிசோதித்த பிறகே கூறமுடியும் என்றேன்.

ஆனால் மீண்டும் என்னைக் காண வந்தவர்கள் கையில் அழைப்பிதழைத் தந்துவிட்டுச் சென்றுவிட்டனர். எனினும் அந்த நாளில் நான் தர்மபுரியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளேன். இதனால் என்னால் வர இயலாது என்பதை விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துவிட்டேன்” என்றார்.