ஆப்கனுக்கு முழுக்கு: சீக்கியர்கள் முடிவு

ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் இறந்ததை தொடர்ந்து, அங்கு வசிக்கும் சீக்கியர்கள், இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர்.

ஆப்கனில் கடந்த 1990ம் ஆண்டுகளுக்கு முன் 250,000 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் வசித்து வந்தனர். ஆனால், தற்போது, 300 சீக்கிய குடும்பத்தினர் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க அதிபரை சந்திக்க சென்ற போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சீக்கியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சீக்கியர்களில் பலர் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆனால், சிலர், ஆப்கன் தான் சொந்த நாடு எனக்கூறி, அங்கேயே தங்க முடிவு செய்துள்ளனர். சீக்கிய அமைப்பின் சிலர், ஜலாலாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். பார்லி தேர்தலில் போட்டியிடும் அவதார் சிங் கல்சாவும் தஞ்சம் அடைந்துள்ளார்.

சீக்கிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்களும், இந்தியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கி கொள்வதற்கு வசதியாக அவர்களுக்கு நீண்ட கால விசாவை மத்திய அரசு வழங்குகிறது..

இந்த தாக்குதலுக்கு ஐ.நா., பொதுச்செயலர் ஆன்டனியோ குட்ரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஏற்று கொள்ள முடியாதது. சர்வதேச விதிகளை மீறிய செயல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.