ஆபாச புராணம் என்ற பெயரில் முருகப் பெருமானை கேவலமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் ‘யூ டியூப்’ சேனல்

‘ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி, ‘வீடியோ’ வெளியிட்ட, கருப்பர் கூட்டம் என்ற, ‘யூ டியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஹிந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி, கருப்பர் கூட்டம் என்ற, ‘யூ டியூப் சேனல், ஆபாச புராணம் என்ற பெயரில், கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர்.

மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., கட்சி, சென்னை மத்தியகுற்றப்பிரிவில் புகார் அளித்தது. பா.ஜ., புகாரின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது இந்திய தண்டனை சட்டம் 153, 153(ஏ)(1), 295(பி), (505(1), (பி), 505(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன்(49) என்பவரை கைது செய்த மத்தியகுற்றப்பிரிவு போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.