அ.தி.மு.க., – தி.மு.க., சம அளவில் வெற்றி

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. – தி.மு.க. மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தி.மு.க.,வின் கை சற்று ஓங்கி உள்ளது. மாவட்ட கவுன்சிலர்களாக, அதிமுக கூட்டணி 243, திமுக கூட்டணி 267, மற்றவை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களாக அதிமுக கூட்டணி 2,165, திமுக கூட்டணி 2,330, மற்றவை 536 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது.

அ.தி.மு.க. – தி.மு.க. கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ. – பா.ம.க. – தே.மு.தி.க. – த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் காங். – இரு கம்யூ. – ம.தி.மு.க. – வி.சி. உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. – தி.மு.க. மாவட்ட செயலர்களால் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளாட்சி இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அ.தி.மு.க. 435 மாவட்ட கவுன்சிலர் 3842 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியது.

கூட்டணியில் உள்ள பா.ஜ. 81 மாவட்ட கவுன்சிலர் 535 ஒன்றிய கவுன்சிலர்; தே.மு.தி.க. 29 மாவட்ட கவுன்சிலர் 434 ஒன்றிய கவுன்சிலர். பா.ம.க. 36 மாவட்ட கவுன்சிலர், 432 ஒன்றிய கவுன்சிலர்; த.மா.கா. ஆறு மாவட்ட கவுன்சிலர் 47 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டன. தி.மு.க. 416 மாவட்ட கவுன்சிலர், 4139 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங். 74 மாவட்ட கவுன்சிலர் 421 ஒன்றிய கவுன்சிலர்; மார்க்சிஸ்ட் 22 மாவட்ட கவுன்சிலர் 257 ஒன்றிய கவுன்சிலர்; இந்திய கம்யூ. 23 மாவட்ட கவுன்சிலர் 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டன.

ம.தி.மு.க. 10 மாவட்ட கவுன்சிலர், 92 ஒன்றிய கவுன்சிலர்; விடுதலை சிறுத்தைகள் கட்சி 24 மாவட்ட கவுன்சிலர் 106 ஒன்றிய கவுன்சிலர்; கொ.ம.தே.க. 4 மாவட்ட கவுன்சிலர், 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டன. இரண்டு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் 315 மையங்களில் நேற்று(ஜன.,2) எண்ணப்பட்டன. காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. பகல் 10:00 மணியில் இருந்து முன்னணி நிலவரம் வெளியாகத் துவங்கியது. இரு கூட்டணி கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன.

இன்று(ஜன.,3) மாலை 7:00 மணி நிலவரப்படி 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் முன்னிலை விபரம் தெரிந்த இடங்களில் அதிமுக கூட்டணி 243 இடங்களிலும், திமுக கூட்டணி 267 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

மொத்தமுள்ள 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், திமுக கூட்டணி 2,330 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2,165 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளின்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் அ.தி.மு.க. 1,797 இடங்களிலும் தி.மு.க. 2,110 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவிகளில், அதிமுக 213 இடங்களிலும் திமுக 247 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் ஒன்றிய வார்டுகளிலும் எந்த கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர் தலைவர் மற்றும் துணைத் தலைவராக முடியும். எனவே மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழுத் தலைவர், துணை தலைவர் பதவிகளை எந்த கட்சி கைப்பற்றப் போகிறது என்பது இன்று இரவு தெரியவரும்.