அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு!

இந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ யூனியன் அலுவலகத்தின் சுவரில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் தொங்கவிடப்பட்டு உள்ள விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

ஜின்னா புகைப்பட விவகாரம் தொடர்பாக அலிகார் எம்.பி. சதிஷ் கவுதம் இவ்வார தொடக்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் பல்கலைக்கழகம் தரப்பில் ஜின்னாவின் புகைப்படம் வருடக்கணக்கில் சுவரில் தொங்குவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. செவ்வாய் கிழமை பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபி கித்வாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் என்பதை குறுப்பிட்டு காட்டினார். “ஜின்னா 1938-ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார். 1920-ல் ஜின்னாவும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகியாவார். கொடையாளியும் கூட,” என ஷாபி கித்வாய்.

பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி முன்வைப்பதற்கு முன்னதாகவே அவர் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் என பல்கலைக்கழகம் தெரிவித்தது.

சதிஷ் கவுதம் கடிதத்தை பாரதீய ஜனதாவின் திசைதிருப்பும் தந்திரம் என விமர்சனம் செய்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் பேசுகையில், “நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு உள்ள மக்களை உண்மையான விவகாரங்களில் இருந்து திசை திருப்பும் முயற்சிதான் ஜின்னா புகைப்பட விவகாரம்,” என்று குறிப்பிட்டார். பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவ்வமைப்பை சேர்ந்த அமீர் ரஷீத் என்பவர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியதை அடுத்து இவ்விவகாரம் வெளிவந்து உள்ளது. கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து விட்டது.

இவ்விவகாரம் பிரச்சனையாகி உள்ள நிலையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் யுவ வாஹினி அமைப்பு ஜின்னாவின் புகைப்படத்தை நீக்க கெடு விதித்து உள்ளது. 48 மணி நேரங்களில் ஜின்னாவின் புகைப்படம் பல்கலைக்கழகத்தில் அகற்றப்படவில்லை என்றால் நாங்கள், வலுக்கட்டாயமாக அதனை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என யுவ வாஹினி அமைப்பின் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையானது யுவ வாஹினி அமைப்பின் துணை தலைவர் ஆதித்யா பண்டிட்டால் கொடுக்கப்பட்டு உள்ளது.