அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அனைவரும் வரவேற்பு
பிளஸ்–2 பொதுத்தேர்வில் ரேங்க் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். அதன் முன்னோட்டமாகதான் இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக பிளஸ்–2 தேர்வு முடிவு 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு செல்போன் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமையும். ரேங்க் முறை இருந்தபோது பெரும்பாலான கல்லூரிகள் அதை பயன்படுத்தி மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தன.
ஒரு மதிப்பெண் குறைந்து இருந்தாலும் அந்த மாணவனுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும். அத்துடன் அவனுடைய வீட்டில் அது குறித்து கேட்கும் போது மனஅழுத்தம் ஏற்பட்டு விடும். இதை மனதில் வைத்துதான் இந்த கிரேடு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அனைவரும் வரவேற்று உள்ளனர்.
புதிய பாடத்திட்டம்
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு, அது ஜனாதிபதி கையில் கிடைப்பதற்கு சில நாட்கள் ஆகி விடும். உடனடியாக அதை செய்ய முடியாது.
நீட் தேர்வுக்கு நமது மாநிலத்தை சேர்ந்த மாணவ–மாணவிகள் தகுதியாகுவதற்கு ஏற்றவாறு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. அந்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, வரும் கல்வி மானிய கோரிக்கையின்போது சட்டசபை மூலம் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு நிகராக புதிய பாடத் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்த பாடத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராக வாய்ப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.