அரசியலில் வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மையே சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் எம்.ஜி.ஆர். குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியது உண்மை என்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

மதுரவாயலில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்து பேசும்போது, ‘தமிழகத்தில் நல்ல தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப நான் வருகிறேன்’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்து கொண்டார்.

ரஜினிகாந்த் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்றது குறித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் சளைக்காமல் பதில் அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரஜினிகாந்த் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கு பெற்றீர்களே?

பதில்:- 53 ஆண்டுகளாக பேனா நண்பர்கள் வட்டத்தில் தொடங்கிய என்னுடைய எம்.ஜி.ஆரின் புகழ் பரப்பும் பணி இன்று வரையில் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை காமராஜர் அரங்கத்தில் நான் சிறப்பாக கொண்டாடினேன். அதற்காக உங்களுக்கு விருது வழங்குகிறேன் என்று என்னுடைய சக காலத்து அரசியல் நண்பர் ஏ.சி.சண்முகம் என்னை அந்த விழாவிற்கு அழைத்தார். அதற்காகவும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியினை ஒரு பல்கலைக்கழகம் நடத்துகின்றது. இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியில் மதிப்புமிக்க ஒரு நல்ல மனிதர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார்.

இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, எம்.ஜி.ஆரின் புகழ் பரப்பும் தொண்டனுக்குரிய கடமைகளில் முதன்மையானது என்ற அடிப்படையில் நான் கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே வெகு சிறப்பாக ஏ.சி.சண்முகத்தால் நடத்தப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியின் சிறந்த திட்டங்களையும், எம்.ஜி.ஆரின் சிறப்புக்களையும், அவரது ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய மனிதநேய பண்புகளையும் கேட்டு மெய் சிலிர்த்து போனேன். அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் ஒரு தொண்டன் என்ற வகையில் நான் பங்கு பெற்றேன்.

கேள்வி:- சமீபகாலமாக அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் பங்கு பெறாமல் இருக்கிறீர்களே ஏன்?

பதில்:- ஜெயலலிதா மறைவிற்கு பின்னால், இந்த கட்சியும், ஆட்சியும் எப்படி நடத்தப்பட வேண்டும், ஆட்சியில் செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் என்னென்ன? கட்சியை எப்படி வழி நடத்த வேண்டும்? கட்சிக்கு முறைப்படி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி வழிகாட்டு குழுவினை அமைத்து, மக்கள் விரும்புகின்ற வகையில் மதுவிலக்கு கொள்கை, ஆற்று மணல் எடுப்பதற்கு தடை, தி.மு.க.வை கடுமையாக எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள், வெளிப்படையான நிர்வாகம் என்ற வகையில் கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்று 2016-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி அன்று, நான் சசிகலாவிடம் நேரிலும், கடிதம் மூலமும் தெரிவித்தேன். அப்போது கட்சிக்கும், ஆட்சிக்குமான என்னுடைய ஆலோசனைகளை தெரிவித்தேன். அந்த ஆலோசனைகள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால்தான் சசிகலா என்னை அமைப்புச்செயலாளராக நியமனம் செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பின்னர் பல்வேறுவிதமான அரசியல் மாற்றங்கள், கட்சியை கைப்பற்றுவதற்காக தீட்டப்பட்ட சதி திட்டங்கள் என பல்வேறுவிதமான முறையற்ற செயல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்ற வேளையில், இனி இந்த அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என்று அன்றிலிருந்து நான் ஒதுங்கிக்கொண்டேன். ஒவ்வாமை உள்ள உணவினை சாப்பிட்டால், நமது உடல் அதனை ஏற்றுக்கொள்ளாது. அதேபோல் தான், அரசியலில் இன்றைக்கு ஒவ்வாமை எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதனால்தான் நான் ஒதுங்கி இருக்கிறேன்.

எனக்கு எம்.ஜி.ஆர் மீது தீவிரமான காதல், பக்தி என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி அவரை நேசிப்பவன். அவருடைய எண்ணங்களை, கொள்கைகளை, லட்சியங்களை அப்படியே பின்பற்றுபவன். பொது வாழ்வில் தூய்மையான மக்கள் சேவையை செய்ய வேண்டும்.

அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக தி.மு.க.வை கருணாநிதி குடும்ப சொத்தாக மாற்றிய அந்த அநீதியை எதிர்த்து போராட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கொள்கைகளை பின்பற்றி வருபவன் நான்.

அரசியல் அதிகாரத்தின் மூலம் செய்ய வேண்டிய பணியை நான் மேயராக பணியாற்றிய ஐந்தாண்டு காலம் லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தினேன் என்பதை சென்னை மாநகர மக்களும், மாநகராட்சி அதிகாரிகளும் நன்கு அறிவார்கள். அதிகாரங்கள் இல்லாத இந்த நேரத்தில் மக்கள் சேவையை பிரதானப்படுத்தி என்னுடைய கல்வி சேவை மற்றும் சமூக சேவையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்.

கேள்வி:-அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:-ஆம். தமிழக அரசியலில் கவர்ச்சிமிக்க, ஆளுமைத்திறன் கொண்ட தலைமை இல்லாதது உண்மை தான். எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் அவருக்கு ஈடு கொடுக்கின்ற வகையில், கருணாநிதியின் பேச்சு, எழுத்தாற்றல் இருந்ததால், கருணாநிதி-எம்.ஜி.ஆர். என்று இருந்தது.

அதன்பின்னர், கருணாநிதி-ஜெயலலிதா என்ற ஆளுமைகளின் காலத்தில், புதிய அரசியல் கட்சிகள் தோன்றி அவைகள் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. வெற்றியும் பெறவில்லை. நடிகர் ஆனாலும் சரி, அரசியல் கட்சி தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிகள் ஆனாலும் சரி, இந்த இரண்டு ஆளுமைகளின் காலத்தில் அவர்கள் வளர்ச்சி அடைய முடியவில்லை. இந்த இரண்டு ஆளுமை தலைமைகள் இருந்த இடத்திற்கும் இன்றைக்கு மக்கள் தலைமை ஏற்றுக்கொள்வதற்கும், எவரிடத்திலும் தலைமைப்பண்பு, கவர்ச்சி, எழுச்சி என்று எந்த பண்பும் இல்லாத காரணத்தினால் ஒரு வெற்றிட அரசியல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

கேள்வி:-எம்.ஜி.ஆர். ஆட்சியை போல் தருவேன் என்று ரஜினிகாந்த் சொன்னது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்:- எம்.ஜி.ஆர். மக்களுக்கான ஒரு ஆட்சியை நடத்தினார். ஊழல் அற்ற நேர்மையான ஒரு நிர்வாகத்தை கொடுத்தார். அமைச்சர்கள் ஆனாலும் சரி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் சரி, கட்சியில் தகுதி உள்ளவர்களை தொண்டர்களே தேர்வு செய்கின்ற ஒரு ஜனநாயக மரபினை கடைபிடித்தார். அரசு அதிகாரிகளுக்கு உரிய மரியாதையை கொடுத்தார்.

கட்சிக்காரர்கள் காவல் நிலையத்திலோ, அரசு அலுவலகங்களிலோ நிர்வாகத்தில் தலையிடுவதை அனுமதிக்கமாட்டார். அவரது ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி என்பதை மக்களுக்கான திட்டங்களில் பிரதிபலித்தார். அவரது ஆட்சி மக்களுக்கான ஆட்சி, அறம் சார்ந்த ஆட்சி என்பதற்கு மூன்று முறை மக்கள் அவருக்கு வழங்கிய அங்கீகாரமே சாட்சி.

பெருமைக்கு சான்று

அவர் கலைத்துறையில் சம்பாதித்த சொத்துகளை தொடக்கம் முதல் அவரது மறைவு வரை மக்களுக்காக வழங்கினார். தேவைப்படுபவர்களுக்கு வழங்கினார். அவருடைய மறைவிற்கு பின்னரும், தன்னுடைய சொத்துகள் மற்றவர்களுக்குத்தான் என்று உயில் எழுதி வைத்தார். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இடத்தையோ, சொத்துகளையோ சம்பாதிக்காமல் மக்கள் உள்ளங்களை மட்டும் கொள்ளை அடித்தார். அதனால் தான் அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதனால்தான், எம்.ஜி.ஆரின் ஆட்சியில் நடைபெற்ற அந்த திட்டங்களை பற்றி ரஜினிகாந்த் குறிப்பிட்டு பேசி, எம்.ஜி.ஆர். ஆட்சியை போன்றதொரு ஆட்சியை கொண்டு வருவேன் என்று சொன்னது, எம்.ஜி.ஆரின் பெருமைக்கும், புகழுக்கும் அதை அவர் சான்றாக சொன்னார் என்று தான் நான் நினைக்கிறேன்.

30 ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு தெரிந்து, அன்றைய மேடையில் ரஜினிகாந்த் பேச்சில் தான் எம்.ஜி.ஆரின் பெருமைகள் ஓங்கி ஒலிக்கின்ற வகையில் இருந்தது. இதனால் லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இளைய தலைமுறையினருக்கு எம்.ஜி.ஆரை பற்றியும், அவரது ஆட்சியை பற்றியும், அவருடைய திறமையை பற்றியும், சிறப்பான சாதனைகளை பற்றியும், அவரது மனிதநேய உதவிகளை பற்றியும் சொல்லி இருப்பது, எனக்கு முண்டாசுக்கவிஞன் பாரதியார், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு எனக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.