அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்: தீபா ஜெயக்குமார்

தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக வரும் பிப்ரவரி 24-ம் தேதியன்று விரிவாக அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள் கிழமை காலை அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது என முடிவு செய்திருப்பேன். தமிழகத்தை ஆசியாவின் சிறந்த மாநிலமாக முன்னேற்ற பாடுபடுவேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தவிர வேறு எவரையும் தலைமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை” எனக் கூறினார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத அதிமுகவினர் பலரும் தீபா தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், வரும் பிப்.24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக தீபா தெரிவித்துள்ளார்.