அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது: ஓபிஎஸ்-க்கு குவியும் பாராட்டு

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்த அம்மா கல்வியகம் இணையதளத்தில் இணைந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை 9 நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

சசிகலாவின் தலைமையை எதிர்த்து, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘அம்மா கல்வியகம்’ (www.ammakalviyagam.in) எனும் இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன், அதிமுகவின் அப்போதைய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதனால் உருவாக்கப் பட்டது. ஓராண்டுக்குப் பிறகு, இணையதள வடிவமைப்பு முடிந்து, ஓ.பன்னீர் செல்வத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த இணையதளத்தில், பிளஸ் 2 மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்களுக்கும், ஐஐடி நுழைவுத் தேர்வுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.

இந்த இணையதளம் தொடங்கி 9 நாட்களான நிலையில், நேற்று காலை நிலவரப்படி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் இதில் இணைந்துள்ளதாக, ஓபிஎஸ் அணியின் தகவல் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியபோது, ‘‘ஐஐடி ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சியில் 8,500 பேர் சேர்ந்துள்ளனர். பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுக்கான சந்தேகங்களை 24 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். மற்றவர்கள் வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 9 நாட்களிலேயே இந்த இணையதளம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இ-மெயில், செல்போன் வாயிலாக தொடர்புகொண்டு ஏராளமான பெற்றோர் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த ஒரு மாணவனின் தாய், பிளஸ் 1 படிக்கும் தன் மகனுக்கு இலவசமாக ஐஐடி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்’’ என்றார்.