அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா என்பது வதந்தியே: டிடிவி தினகரன்

அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர் ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறுவது வதந்தியே என்று அதிமுக(அம்மா) கட்சியின் துணை பொதுச் செயலளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று சென்ற அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:

”வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அது வதந்தியே. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவில்லை.

விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் எப்போது ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்?

ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் நடந்தால் நான்தான் வேட்பாளர்” என்று டிடிவி தினகரன் கூறினார்.