அமைச்சர் அக்பர் ராஜினாமா

பெண் பத்திரிக்கையாளர்களின் தொடர் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜெ.அக்பர் ராஜினாமா செய்தார்.

அக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பிரியா ரமணிக்கு ஆதரவாக மேலும் 19 பெண் பத்திரிக்கையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். தி ஏசியன் ஏஜ் பத்திரிக்கையில் பணியாற்றிய போது அக்பர் தங்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அக்பர் தொடர்பான வழக்கில் கோர்ட் தங்களின் சாட்சியங்களையும் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பிரியா ரமணி தனி ஆள் இல்லை எனவும், தங்களுக்கு அக்பர் அளித்த பாலியல் தொல்லைக்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கையாளர் ஒருவரும் குற்றச்சாட்டில் இணைந்துள்ளார். இதன் மூலம் மத்திய அமைச்சர் அக்பருக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி உள்ள பெண் பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

இதனையடுத்து அக்பர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நெருக்கடி அளித்து வந்தன. இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள அக்பர், ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் அனுப்பி உள்ளார். மத்திய அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காக மோடி மற்றும் சுஷ்மாவிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.