அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து ஊழியர்கள் மே 15 முதல் வேலைநிறுத்தம் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 4-ம் தேதி நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. துறை செயலர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே மற்றும் தொழிற்சங்க தரப்பில் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், தொமுச பொருளாளர் கி.நடராஜன் உட்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொழிற் சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும். பின்னர், படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் இதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஓய்வூதியம் நாளை கிடைக்கும்
போக்குவரத்து துறையில் பல ஆண்டுகளாக நிதிப் பற்றாக்குறை உள்ளது. ஆனபோதிலும், நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் அரசு பேருந் துகள் இயக்கப்படுகின்றன. 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டு, விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. புதிய பேருந்துகள் வந்ததும், பழைய பேருந்துகள் நீக்கப்படும். ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஓய்வூதியம் 10-ம் தேதி (நாளை) கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்
செய்தியாளர்களிடம் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:
கடந்த பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்டதையே இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் வந்து கூறுகிறார். தமிழக அரசு ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது போதாது. கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தலாம் என அறிவித்துள்ளோம். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.1,700 கோடி நிலுவையில் உள்ளது. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.285 கோடி தேவையாக உள்ளது. எனவே, உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களில் வரவு செலவு இடைவெளியால் தினசரி ரூ.5 கோடிக்கு இழப்பீடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு, ஊதிய ஒப்பந்தம் குறித்து பேசலாம் என்று வலியுறுத்தினோம். தமிழகத் தில் சுமார் 17 ஆயிரம் அரசு பேருந்துகள் காலாவதியான நிலையில் ஓடுகின்றன. 6 ஆயிரம் பேருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டும். எனவே, வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கும். அதேநேரம், அமைச்சர் எப்போது அழைத்தாலும், நாங்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளாம்.
இவ்வாறு அவர் கூறினார்.