அமெரிக்க பள்ளிகளில் யோகா – 27 ஆண்டு தடை நீங்குகிறது !!

அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்த தடை நீக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா வகுப்புகள் நடைபெற்று வந்தன. கன்சர்வேடிவ் கட்சியினரின் எதிர்ப்பால், அலபாமா கல்வி வாரியம், 1993ல், யோகா வகுப்புகளை தடை செய்தது.

இந்நிலையில், ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜெர்மி கிரே, ”மன அழுத்தம், பதற்றம், மன சோர்வு உள்ளிட்டவற்றை நீக்க உதவும் யோகா வகுப்புகளை, மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்,” என, வலியுறுத்தினார். அவரது முயற்சியால், அலபாமா மாகாண பிரதிநிதிகள் சபையில், யோகா மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மசோதாவில், ‘யோகாவின் அனைத்து தோற்றங்கள், பயிற்சிகள் மற்றும் நுட்பங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர்கள் மற்றும் விளக்கம் தரப்படும். ஆனால், கோஷமிடுதல், மந்திரங்கள், முத்திரைகள் மற்றும் கை கூப்பி வணக்கம் தெரிவித்தல் போன்றவை தடை செய்யப்படும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், ‘கொரோனா’ வைரஸ் பரவுவதை தடுக்க, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உட்பட உலக தலைவர்கள் பலரும், கை குலுக்குவதற்கு மாற்றாக, கைகளை கூப்பி வணக்கம் செலுத்தும் முறையை பின்பற்றுகின்றனர்.