அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன ‘கன்பூசியஸ்’ கலாசார மையங்கள் மூடப்படும் – அமெரிக்கா அதிரடி

சீன அரசின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் உளவாளிகளை உருவாக்குகின்றன. இதனால், அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன ‘கன்பூசியஸ்’ என்ற கலாசார மையங்கள் இந்தாண்டுக்குள் மூடப்படும் என வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிரடியாக அறிவித்துள்ளார்.

சீனா தங்கள் நாட்டின் மொழி, கலாசாரம், பெருமைகளை உலக நாடுகளில் பரப்புவதற்காக கன்பூசியஸ் கல்வி நிறுவனம் என்ற ஒன்றை 2004ம் ஆண்டில் தொடங்கியது. சீன தத்துவ அறிஞர் பெயரிலான அந்நிறுவனம், உலக நாடுகளில் உள்ள 160 பல்கலைக்கழங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் அமெரிக்க பல்கலைக்கழங்கள் பலவற்றிலும் இயங்கி வருகின்றன. அவை அனைத்தையும் இந்தாண்டுக்குள் இழுத்து மூடுவோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்கு முன்னதாக அமெரிக்கா – சீனா இடையே இருந்த வர்த்தக அளவிலான பிணக்குகள் தற்போது வளர்ந்து அரசியல் பிணக்குகளாகியுள்ளது. சீனாவின் டிக் டாக், வீசாட் போன்ற செயலிகளை அமெரிக்கா முடக்கியுள்ளது. ஜூலை மாதம் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை அமெரிக்கா மூடியது. பதிலடியாக சீனாவின் செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இரு நாட்டு தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் முக்கிய வார்த்தையாக சீனா மாறியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இயங்கி வரும் சீனாவின் கம்பூசியஸ் கல்வி மற்றும் கலாசார மையங்கள் சீன அரசாங்கத்தின் நிதி பெற்று அமெரிக்காவிற்கு எதிராக உளவாளிகளை உருவாக்குகிறது என வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவை அனைத்தையும் இந்தாண்டுக்குள் மூட உள்ளதாக அறிவித்துள்ளார்.