அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரபூர்வமாக தேர்வு

அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான “தேர்வு செய்வோர் அவை’ மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 227 வாக்குகளும் கிடைத்தன. கட்சி மாறி 7 வாக்குகள் பதிவாயின. அதில் டிரம்புக்கு ஆதரவாக 2 பேரும், ஹிலாரி கிளிண்டனுக்கு 4 பேரும் ஆதரவாக வாக்களித்தனர்.
எலெக்டோரல் காலேஜ் முறையில் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெறுவதற்கு 270 உறுப்பினர்களின் வாக்குகளே போதுமானதாகும். அதையும் விட 34 வாக்குகள் டிரம்புக்கு அதிகமாக கிடைத்தன. இதன்மூலம், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிகார பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.
எலெக்டோரல் காலேஜ் முறை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்து சுட்டுரையில் டிரம்ப் பதிவுகளை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்த தேர்தலானது, நாடு முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான கடின உழைப்பாளிகள், பெண்களை கொண்ட இயக்கம் பின்னணியில் இருப்பதையும், அவர்கள் தேர்தலை ஆக்கப்பூர்வமானதாக மாற்றிக் காட்டியதையும் வெளிப்படுத்துகிறது. சிறந்த எதிர்காலத்தை நோக்கி பணியாற்றுவதற்கு, இந்த வரலாற்று நிகழ்வு அடித்தளமிட்டுள்ளது. அனைத்து அமெரிக்கர்களின் அதிபர் என்ற முறையில், இந்த நாட்டை ஒன்றுபடுத்த நான் பாடுபடுவேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அமெரிக்காவை மீண்டும் ஒருமுறை மிகச்சிறந்த நாடாக்குவோம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டுரையில் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஊடகங்கள் செயல்பட்ட விதத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவி தேர்தலானது, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் வேறுபட்டதாகும். அத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சார்பில் அதிபர் பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். அவர்களது கட்சி சார்பில் தேர்தலில் மாகாணங்கள் வாரியாக உறுப்பினர்கள் போட்டியிடுவர். அவர்களுக்கு மாகாணங்கள் வாரியாக பொது மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வர். அதில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் பின்னர் ஒன்று கூடி, கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட அதிபர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்வர். அதன்படி, டொனால்ட் டிரம்ப் தற்போது அமெரிக்க அதிபராக அதிகார பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதியன்று பதவியேற்கவுள்ளார்.